ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் சித்திரை பிரமோற்சவத்தில் இன்று ஐந்தாம் நாள். ஆழ்வார் திருநகரியில் இருந்து ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானும், ஸ்ரீ நம்மாழ்வாரும் இங்கு எழுந்தருள்வர். அதுபோல் திருவரகுணமங்கை, திருப்புளிங்குடி ஆகிய கோவில்களில் இருந்தும் பெருமாள் இங்கு எழுந்தருள்வர். இந்நான்கு பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்து நம்மாழ்வார் வரவேற்பு அளிப்பார். இன்று இரவு நான்கு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. சிற்பக் கலையில் நாயக்க மன்னர்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாங்குநேரி ,திருக்குறுங்குடி, ஸ்ரீவைகுண்டம், கிருஷ்ணாபுரம் போன்ற பல கோவில்களில் நாயக்கர் மண்டபம் என்ற பெயரில் சிற்பக் கூடங்கள் தனியாக அமைந்திருப்பதை காணலாம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் ராஜகோபுரத்திலும், அதற்கு அருகில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியிலும் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்பிரகாரச் சுவர்கள் முழுவதும் ராமாயண, மகாபாரத புராணங்களை விளக்கும் அரிய மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கு, பெருமாளை அறிய வைப்பது சுலபம்.
